சென்னை மாநகராட்சியின் ஏழு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள உர்ப சேர் ஸ்மித் நிறுவனத்தின் பொறியியல், வாகன பராமரிப்பு நிலையத்தைத் திறந்துவைப்பது, தூய்மைப் பணிகளுக்காகப் புதிதாக 300 மூன்று சக்கர மிதிவண்டிகளைத் தொடங்கிவைப்பதற்கான நிகழ்ச்சி ராயப்பேட்டையில் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். மேலும் தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கான மழைக்கால கவச உடையையும் (ரெயின் கோட்) கே.என். நேரு வழங்கினார். நிகழ்ச்சியில் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, "வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து தினசரி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 969 கிலோ மீட்டர் நீளத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில் 90 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் 10ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும். மேலும் சென்னையில் உள்ள ஏரிகளில் நீர் செல்வதற்காக உள்ள தடைகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்றுவருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த சென்னை மாநகராட்சித் தயாராக உள்ளது. கரோனா தடுப்புப் பணிகளான முகக்கவசம் அணிவது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் முழுமையாகக் கண்காணித்துவருகிறோம்.