சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் பிற துறைகளின் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2018 ஜூலை 20ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில், “குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு தகுதி பெறுவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் 2021 அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆன்லைன் மூலம் மனு அளித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த மனுவில், “2013ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பினை பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றொரு நியமன தேர்வு நடத்தி பணி வழங்க அரசாணையை அன்றைய அதிமுக அரசால் வெளியிடப்பட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையை அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்றைய நமது முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கூறினார்கள். ஆகவே முதலமைச்சர் கூறியதுபோல் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படுமா அல்லது நியமன தேர்வு அடிப்படையில் பணி வழங்கப்படுமா என்பதைத் தெரிவிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நியமன தேர்வு மூலம் பணி வழங்கும் பட்சத்தில் தேர்வுக்கான பாடத்திட்டத்தின் விரைந்து வெளியிட்டால் பத்து வருடங்களாக இதனை நம்பியே வாழ்க்கையை தொலைத்த எங்களுக்கு தேர்வுக்கு முயற்சிக்கும்போது ஒரு அதிகபட்ச நேரம் கிடைக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்துள்ள பதிலில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக பணிநியமனம் செய்யப்படும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் பள்ளி கல்வித்துறை அளித்துள்ள பதிலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்விற்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும்.
பள்ளிக் கல்வித் துறையின் 2018 ஜூலை 20ஆம் தேதி அரசாணை எண் 149-ன் படி போட்டித் தேர்வு மூலம் தேர்வு பணி மேற்கொள்ளப்படும். இந்தத் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்போது பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பணியிடை நீக்கம்: கூட்டுறவு வங்கிச் செயலாளர் தற்கொலை