சென்னை: ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 'அம்மா பேரவை' நிர்வாகிகளுக்கான செயல்திறன் மேம்பாட்டு இருநாள் பயிற்சி முகாமை இன்று (மே. 30) தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அதிமுகவின் கடந்த ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற 4 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் புத்தகம் வெளியிடப்பட்டது.
அம்மா பேரவை மாநிலச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள இப்பயிற்சி முகாமில், நிர்வாகிகள் தங்களது செயல்திறனை மேம்படுத்தி கட்சி வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. டிஜிட்டல் பிரசாரம், திண்ணைப் பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைப் பிரசாரம் மூலம் பரப்புரையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக திமுகவின் திராவிட மாடல் மீது குற்றஞ்சாட்டி பரப்புரை செய்வது குறித்தும், மாவட்ட வாரியாக அமைச்சர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்தந்த மாவட்டத்தில் உடனுக்குடன் போராட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்தும் மூத்த நிர்வாகிகள் பேசினர். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் 150-க்கும் மேற்பட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், "உண்மையான திராவிட ஆட்சியை அளிப்பது அதிமுக தான். ஆனால் தற்போது திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஓராண்டில் மக்கள் மத்தியில் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்த ஒரே அரசு திமுக தான். பொய்யை சொல்வதில் அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உண்மையை முழுவதுமாக கூற நமக்கு பயிற்சி தேவைப்படுகிறது. அதனடிப்படையில் தான் இரண்டு நாள் பயிற்சி நடைபெறுகிறது. எனவே இந்த பயிற்சி முடிவில் திராவிட மாடல் என்று பொய் கூறுபவர்களின் முகத்திரையை கிழிக்கும் போர் வீரர்களாக அனைவரும் வெளியில் செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெய்வ சேக்கிழார் பெருமானுக்கு அரசு விழா எடுப்பதில் பெருமிதம்..!’ - அமைச்சர் சேகர்பாபு