கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகளால் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட ஊரடங்கு பல தளங்களுடன் தளர்வுகளுடன் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களால் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவது லாரி உரிமையாளர்களை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஏழாம் தேதி 68.74 ரூபாயக்கு விற்கப்பட்ட டீசல் விலை தினந்தோறும் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 76.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி தொடர்ந்து டீசல் விலையை உயர்த்துவதால் லாரிகள் இயங்குவதற்கு சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
டீசல் விலை ஏற்றம் குறித்து, தென் இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் யுவராஜ் கூறுகையில், " முன்பு கோவையிலிருந்து காய்கறிகள் ஏற்றிவரும் லாரிகள் திரும்புகையில் வேறு ஏதேனும் பொருள்களை ஏற்றிச் செல்வதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அதற்கும் வாய்ப்பில்லை. காய்கறி கடையினர் கொடுக்கும் வாடகை டீசல் செலவிற்கே போதாத நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் விலையை அதிகரிப்பது என்பது எங்கள் தொழிலை ஒட்டுமொத்தமாக முடக்குவதற்கு சமம்” என்கிறார்.
ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்காகத்தான் இவை செயல்படுத்தப்படுகிறது என்கின்றன. அது உண்மை என்றால், ஊரடங்கால் வருமானம் இன்றி பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இந்நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளான காய்கறிகள், சரக்குகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கான டீசல் விலையை ஏற்றுவதால் காய்கறிகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பொருள்களின் விலையேற்றம் அதிகரிக்கும் என்பதை ஏன் உணர மறுக்கின்றன எனக் கேள்வி எழுப்புகின்றனர் காய்கறிகள் ஏற்றிவரும் லாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள்...