எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு நவம்பர் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர 27 ஆயிரத்து 164 மாணவர்கள் பதிவு செய்தனர்.
அதில், 25,725 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 24,154 மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் சேர 16 ஆயிரத்து 597 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 15,067 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். இவர்களில் 14,078 மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 24,154 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 14,078 பேர் என 38 ஆயிரத்து 232 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 395 பேர் பயனடைவார்கள். மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நாளை (நவம்பர் 15) வெளியிடுகிறார்.
2020ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாள்தோறும் 500 மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட்டதும் 17ஆம் தேதியில் இருந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.