சென்னை: நடப்பாண்டில் சுகாதாரத்திற்காக மட்டும் 5,000 கோடி செலவு செய்ய பரிந்துரைத்துள்ளதாக தமிழ்நாடு அரசிடம் ரங்கராஜன் குழு அறிக்கை அளித்துள்ளது.
கரோனா காரணமாக, தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறைகள் கடும் பாதிப்படைந்தன. இதனை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவை அரசு அமைத்திருந்தது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான 24 பேர் கொண்ட இந்தக் குழு, மாநிலம் முழுவதும் பல்வேறு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, பலக்கட்ட ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று(செப்.21) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ரங்கராஜன் குழு அறிக்கை அளித்தது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கராஜன், ” எவ்வளவு சீக்கிரம் இந்த ஊரடங்கிலிருந்து வெளியே வருகிறோமோ, அந்தளவிற்கு பொருளாதாரத்திற்கு நல்லது. ஜிஎஸ்டி, பெட்ரோல் வரி, மின் கட்டணம் போன்றவற்றால் அடுத்த இரண்டு மாதங்களில் பொருளாதாரம் பழைய நிலைக்கு வரலாம். வரிகளை உயர்த்த இந்தாண்டு வழியில்லை. ஆனால், செலவுகள் அதிகரிக்கும் போது வரியையும் மாற்ற வேண்டிய அவசியம்.
குறுகிய காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அரசிடம் பல பரிந்துரைகளை அளித்துள்ளோம். எடுத்துக்காட்டாக நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசியை நவம்பர் மாதத்திற்கு பிறகும் நீட்டிக்க தெரிவித்துள்ளோம். கட்டுமான தொழிலாளர்கள் நிதியத்தில் உள்ள 3,200 கோடியை உடனடியாக செலவழிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் சுகாதார செலவிற்கு 5,000 கோடி செலவு செய்ய வேண்டும். செலவுகளை அதிகரித்தால் தான் பொருளாதாரம் வளரும் என்றும், பட்ஜெட்டில் உள்ள மூலதன செலவைக் காட்டிலும் பத்தாயிரம் கோடி அதிகம் செலவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம். தொழில் துறைக்கு ஆயிரம் கோடி மூலதன நிதியை அதிகரிக்க வேண்டும், அப்போதுதான் அது நீண்டகால உதவிகளை அளிக்க முடியும். தொழில் பூங்காக்களை உருவாக்கி, அதில் ஒரு பங்கை சிறு தொழில்களுக்கு கொடுக்க வேண்டும்.
சிறு தொழில் கடன் உத்தரவாத திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். மேலும், மாநில அரசு செய்ய வேண்டிய நீண்டகாலப் பரிந்துரைகளையும் அளித்துள்ளோம் ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கிராமங்களை அழித்து பெரிய நகரங்களாக மாற்றுவதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை - கே.எஸ்.அழகிரி