சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 1) முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளி திறப்பை ஒத்திவைக்குமாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,
”தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது!
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கரோனா பாதிப்பை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது!
பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் நேரலை