இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை; எந்தத் தவறும் இல்லை. பல்கலைக்கழக மானியக்குழுவும், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவும் இறுதி பருவத்தேர்வுகளில் மட்டும் தான் தேர்வு எழுதாமல் தேர்ச்சி வழங்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தன. உச்ச நீதிமன்றமும் அதே கருத்தைத்தான் தெரிவித்தது. அதன்படி, இறுதி பருவத்தேர்வுகளில் எந்த மாணவருக்கும் தமிழ்நாடு அரசு தேர்ச்சி வழங்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது அரசின் முடிவை ஒழுங்குமுறை அமைப்புகள் எதிர்ப்பதில் அர்த்தமில்லை.
முந்தைய தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் தேர்வே எழுதாமல் வெற்றி பெற்றதை தொழில் நிறுவனங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளாது என அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கூறியிருப்பது நியாயமற்றது. கடந்த மே மாதம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தால், அரியர் பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அதை கருத்தில் கொண்டுதான் அவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி கூடாது என்றால், அது மாணவர்களின் எதிர்கால கற்றல் திறன், தேர்வு முடிவுகள் ஆகியவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, அரியர் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான விஷயத்தில் ஏ.ஐ.சி.டி.இ எதிர்ப்பை கைவிட வேண்டும்.
மற்றொருபுறம், அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசுக்கு ஏ.ஐ.சி.டி.இ எந்தக் கடிதமும் எழுதவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அரசின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. இத்தகைய சூழலில், இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில் உறுதியாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’சமஸ்கிருத திணிப்பிற்கு துணைபோகும் தமிழ்நாடு அரசு’