தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்,
அதில், "இந்தியாவில் அதிகம் பேர் பயணிக்கும் தொடர்வண்டி வழித்தடங்களை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையற்ற, தனியார் நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட இந்த முடிவு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் சார்ந்த கோணத்தில் பார்க்கும்போது இது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கியமான போக்குவரத்து முறையை தலைகீழாக சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமையும்.
தனியார் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டால் அவற்றின் பயணக்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். இப்போது வசூலிக்கப்படும் பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47 விழுக்காடு மானியமாக வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் ரூ.42,000 கோடி இழப்பை, சரக்குப் போக்குவரத்தில் கிடைக்கும் லாபத்திலிருந்துதான் தொடர்வண்டித் துறை ஓரளவு சமாளிக்கிறது. ஞ
தனியார் தொடர்வண்டிகள் இயக்கப்படும்போது இந்த ரூ.42,000 இழப்பும் பயணிகள் தலையில் சுமத்தப்படும். இதற்காக தொடர்வண்டிக் கட்டணம் 28 விழுக்காடு முதல் 244 விழுக்காடுவரை உயர்த்தப்படும். இந்த உயர்வை அடித்தட்டு மக்களால் தாங்க முடியாது.
தனியார் தொடர்வண்டிகளில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இருக்காது என்பதாலும், சாதாரண வகுப்புக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்படும் என்பதாலும் ஏழைகளுக்கு தொடர்வண்டி பயணம் என்பது எட்டாக் கனியாகிவிடும்.
அதுமட்டுமின்றி, நூற்றுக்கணக்கான தொடர்வண்டிகள் தனியார்மயமாக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகும் அல்லது அந்தப் பணியிடங்கள் ஒழிக்கப்படக்கூடும். இவை எதுவுமே தொடர்வண்டித் துறையின் வளர்ச்சிக்கோ, மக்களின் முன்னேற்றத்திற்கோ வழிவகுக்காது.
மக்களவையில் கடந்த ஜூலை 12ஆம் தேதி தொடர்வண்டித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், தொடர்வண்டித் துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்திருந்தார்.
அவ்வாறு உத்தரவாதம் அளித்து 75 நாட்கள் கூட ஆகாத நிலையில் தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கத் துடிப்பது நியாயம் அல்ல. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : "2030ஆம் ஆண்டுக்குள் புவிவெப்பமயமாதலை தடுக்காவிடில் 3.5 கோடி மக்கள் வேலையிழப்பர்" - ராமதாஸ் காட்டம்!