முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வரும் ராபர்ட் ஃபயஸ், தன்னை சந்திக்க இந்தியா வருவதற்கு இலங்கையில் உள்ள தன் மனைவி பிரேமாவிற்கு விசா வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு இறுதியில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பு செயலாளர் கண்ணன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பிரேமா மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை என ஃபயஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தாலும், குற்ற வழக்குகளை காரணம் காட்டிதான் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்யூ பிரிவு காவல்துறை செய்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பிரேமாவின் பெயர் உள்துறை அமைச்சகத்தின் தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும், அவரது பெயர் ஏன் சேர்க்கபட்டது என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது க்யூ பிரிவு காவல்துறையிடம் நீதிமன்றம் விளக்கம் பெறலாம் எனவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: இலங்கைக்கு எதிராக நிலைப்பாடு எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்