சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11-ம் தேதி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் ஆளுநர் தாமதிப்பதால், அவரது முடிவிற்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தடா சட்டப்பிரிவுகளின் கீழ் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா? என விளக்கமளிக்க நளினி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று(26.4.2022), தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை எனக் கூறி, தடா சட்டபிரிவில் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நளினி தடா சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டாரா? என்பதை உறுதி செய்வதற்காக பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தின் அசல் தீர்ப்பை சமர்ப்பிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: அரசியல்வாதிகளை விளையாட்டு சங்கங்களுக்கு தலைவராக ஏன் நியமிக்க வேண்டும்..?