நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்று 1996ஆம் ஆண்டிலிருந்தே அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாடே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று ரஜினிகாந்த் அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஆனால் வருவேன் என்று அறிவித்தாரே ஒழிய செயல்பாட்டில் இன்னும் இறங்கவில்லை. இதனால் உற்சாகமடைந்திருந்த அவரது ரசிகர்கள் சோர்வடைந்தனர். மேலும், ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். எனவே அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியைக் கடந்து, கட்சியைத் தொடங்குவாரா மாட்டாரா என்ற கேள்வியை கேட்க வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இதற்கிடையே, தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என ரஜினி கூறியதும் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதுமட்டுமின்றி அவரது கொள்கைகள் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்க, ரஜினிக்கு தலை சுற்ற பல மீம்ஸ்கள் பிறந்தன.
இது இப்படி இருக்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களைக் காண்பதற்காக அங்கு சென்ற ரஜினியை பார்த்து ஒருவர், ஆமா யாரு நீங்க என கேட்க தமிழ்நாட்டின் சென்சேஷன் ஆனார் ரஜினி. சூப்பர் ஸ்டாரான தன்னை, யாரு நீங்க என கேட்ட டென்ஷனில் இருந்த ரஜினி, இப்டி எல்லாத்துக்கும் போராடுனா தமிழ்நாடு சுடுகாடா மாறிடும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என பற்ற வைக்க (பத்த வைச்சிட்டியே பரட்ட) பத்திரிகையாளர்கள் சூடாகி கேள்வி மேல் கேள்வி எழுப்பினர். அப்போது, ஹே , ஹே வேற எதாவது இருக்கா என அலட்சியமாக அவர் சொல்ல ரஜினியை சுற்றி விமர்சனங்கள் பலத்த அளவில் எழும்பின.
அதேபோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை குறித்து ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, எந்த ஏழு பேரு என்ற ரஜினியின் பதில் கேள்வியால் தமிழ்நாடே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
அதுமட்டுமின்றி ரஜினியை பாஜக வளைக்க முயல்கிறது, பாஜகவின் தமிழ்நாட்டு முகம்தான் ரஜினிகாந்த் என அடுக்கடுக்காக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அனைத்துக்கும் அமைதியாகவே இருந்தார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் நிறுவனத்தில் மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் சிலை இன்று திறக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டுவிட்டு போயஸ் திரும்பிய ரஜினியை சுற்றி மைக்குகள் போடப்பட்டன. பின்பு, தமிழ்நாட்டின் தற்போதைய சென்சேஷன் டாப்பிக்கான, திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல் பாஜக வெளியிட்ட புகைப்படம் குறித்தும், உங்களை பாஜகவின் முகமாக கட்டமைக்க முயற்சிகள் நடக்கிறதே என கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த ரஜினி, ’திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச சிலர் முயற்சிக்கின்றனர். அதில் அவரும் மாட்டமாட்டார், நானும் மாட்டமாட்டேன்’ அதுமட்டுமின்றி, ஊடகத்தில் ஒரு சிலர் மட்டும் என்னை பாஜக முகமாக காட்டுவதற்கு முயல்கிறார்கள். பாஜகவினர் இதை செய்யவில்லை என்ற பதிலளித்து தான் ஒரு பாஜகவின் முகம் என்ற விமர்சனங்களுக்கு விளக்கமளித்திருக்கிறார்.
மேலும், தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் வெற்றிடம் உள்ளது என்று கூறி புதிய பொறியை பற்றவைத்திருக்கிறார் ரஜினி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெளனம் கலைத்துள்ள ரஜினி, ஆளுமை மிக்க தலைமை யார் என்று கூறுவாரா இல்லை ஆளுமை மிக்க தலைமையாக மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.