”நான் எப்போ வருவேன்... எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது” என்று சினிமாவில் பஞ்ச் பேசிவிட்டு தனது ரசிகர்களுடன் நீ...ண்ட காலமாக கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டிருக்கிறார் நடிகர் ‘தலைவர்’ ரஜினிகாந்த். இன்று கட்சி மாநாடு குறித்து அறிவிப்பார் என ரசிகர் பட்டாளம் அவர் படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதைப் போல ஆரவாரத்துடன் லீலா பேலஸ் வாசலில் கூடியது.
தங்களது தலைவருடைய கார் என்ட்ரி ஆனவுடன் மலர்களைத் தூவவும், பட்டாசுகளின் திரியைக் கொளுத்தவும் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். எப்படியும் தலைவர் கட்சியின் பெயரை அறிவிப்பார், கொடியை நாம் அறிமுகப்படுத்துவோம் என்று எண்ணி ரசிகர்களில் சிலர் ரஜினியின் உருவம் பொறித்த கட்சியின் கொடியையும் கைகளில் ஏந்தியிருந்தனர். அங்கு வந்த ரசிகர்களின் ஒரே கேள்வி, ”தலைவரின் கார் போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு கிளம்பிவிட்டதா” என்பதாகவே இருந்தது. ஆதர்ச நாயகனின் காருக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.
அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்: ரஜினிகாந்த் கருத்துக்கு வரவேற்பு
சொன்னபடியே ரஜினிகாந்த்தின் கார், லீலா பேலஸுக்குள் நுழைய, பட்டாசுகள் சத்தத்தாலும், ரசிகர்களின் ஆர்ப்பரிப்பிலும் அரங்கமே அதிர்ந்தது. காரை விட்டு தனக்கே உரித்தான விறு விறு நடையில் மேடையை நெருங்கினார். அவர் மைக்கை பிடித்த அந்த நொடி அவர் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராகவே ஆகிவிட்டார் என்றே அனைத்து ரசிகர்களும் நினைத்திருந்தனர்.
இத்தனை கனவுகளையும் ரஜினியின் ஒற்றை வார்த்தை அடித்து நொறுக்கியது. ”எனக்கு முதலமைச்சராக விருப்பமில்லை. கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் தனித்தனியாக இருக்க வேண்டும். கட்சித் தலைமையை ஏற்றுக்கொண்டு, நல்ல இளைஞர் ஒருவரை ஆட்சித் தலைமையில் அமர்த்துவேன்” என்பதே அது. அவர் இன்று (மார்ச் 12, 2020) எடுத்துரைத்த மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
'யூகங்கள் பேச வேண்டாம், ரஜினி கட்சி பெயரை அறிவிக்கட்டும்'
நீண்ட நாள்களுக்குப் பிறகு திட்டமிட்டு நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்பு என்பதால், ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல விடைகள் கிடைக்கும் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில ஊடகங்கள் இதோ வந்துவிட்டார் உங்கள் 'தலைவன்' என்று கட்டுரைகள் தீட்டின. ஆனால் ரஜினியோ அவர் குறிப்பிட்ட மூன்று திட்டங்களை மட்டுமே பேசிவிட்டுக் நடையைக் கட்டினார். அவரின் திட்டங்களுக்கு ஆதரவுக் குரலும் எதிர்ப்புக் குரலும் ஒருசேர ஒலித்துவருகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிஸ்டம் சரியில்லை, அதை மாற்ற வேண்டும் என்று தான் கூறியதை நினைவுகூர்ந்த ரஜினி, அரசியல் கட்சி அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்கள் வேண்டும் என்றும், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், சமூகத்தில் நல்ல பெயர் உள்ள முன்னாள் ஐஏஎஸ் போன்றவர்களுக்கும் வாய்ப்புகள் அதிகளவு வழங்க வேண்டும் என்றார்.
அரசியலுக்கு வரமாட்டேன் என்றே கூறியிருக்கலாம் - ரஜினியை விமர்சித்த திருமாவளவன்
அப்போதுதான் வெளிப்படையான ஊழலற்ற நியாயமான ஆட்சி நடைபெறும் என்றார். குறிப்பாக, தற்போதுள்ள அரசியல் கட்சிகளில் பதவிகள் அதிகமாக இருப்பதால்தான் ஊழல் மலிந்து கிடப்பதாகக் கூறினார். அதற்காக தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியில் கடைநிலை அளவில் நிரந்தர பதவிகள் இன்றி செயல்படும் என்ற மற்றொரு திட்டத்தையும் முன்வைத்தார்.
ஒரு அரசியல் கட்சி இயங்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை கட்டமைப்பு ’மிக மிக’ அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அரசியல் கட்சிகளில் கிளை அமைப்புகள் இல்லாமல் கடைக்கோடி மக்களைச் சந்திப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ரஜினிகாந்தின் நோக்கம் ஊழலற்ற அரசியல் என்றாலும், அதை நோக்கிய பயணத்திற்கு அவர் முன்மொழியும் பாதை மக்கள் மத்தியில் செல்லுபடியாகுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக வைக்கின்றனர் விமர்சகர்கள். தற்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில் கட்சிக்கும் ஆட்சிக்கும் என தனித் தனியாக இரு தலைவர்கள் இல்லை. இதை மாற்றியமைப்பதே மாற்று அரசியல் என்கிறார் சினி உலக சூப்பர் ஸ்டார். குறுகிய காலத்தில் கட்சியைக் கட்டமைத்து இதை சாதிப்பது சவாலாக இருக்கும் என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ரஜினி முதலமைச்சர் வேட்பாளராக நின்றால்தான், தன் முன் நிற்கும் இரு 'ஜாம்பவான்' கட்சித் தலைவர்கள் ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் சம பலமாக மோத முடியும் என்று கூறும் அவர்கள், ரஜினிகாந்தின் பேச்சு ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தையும், ஒருவித குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.
இன்னைக்கும் அதே தேதி: 'இருக்கு தரமான சம்பவம்' - ரஜினிக்கு ஆதரவாக ட்ரெண்டாகும் மீம்!
ரஜினிகாந்தின் இன்றைய பேச்சு குறித்து மூத்தப் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷிடம் பேசினோம். அவர் ”ரஜினிகாந்த் தவிர்த்து வேறு ஒருவர் முதலமைச்சர் வேட்பாளரானால் அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். எழுச்சி வந்த பிறகு அரசியலுக்கு வருவேன் என்று அவர் கூறியிருப்பது, மக்களின் வரவேற்பை அறியவே அப்படி சொல்லியிருக்கக் கூடும். அவர் நிச்சயம் கட்சி தொடங்குவார்” என்றார்.
ஒரு தரப்பினர் ரஜினிகாந்த் கூறிய எழுச்சி என்பது தலைவர் வழிநடுத்துவதில்தான் உள்ளது, அது எப்படி தானாக உருவாகும் என்றும், மற்றொரு தரப்பினர் ரஜினிகாந்த் முன்வைக்கும் மாற்று அரசியல் நிச்சயம் வெற்றிபெறும் என்று கூறுகின்றனர். அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று அதனைச் சரிசெய்ய வேண்டும் என்று அன்று கூறிய ரஜினி, இன்று அப்படியே உல்டாவாக மக்கள் எழுச்சியிருந்தால் கட்சி தொடங்குவேன் என்று கூறி ஏமாற்றுவதாக அவரது ‘நலன்விரும்பிகள்’ யாருக்கும் கேட்டுவிடக்கூடாது என வாய்க்குள்ளே முணுமுணுக்கின்றனர்.
பலர் பல பல கருத்துகளைக் கூறினாலும் இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்த எந்த விடையும் கிடைக்கவில்லை. அரசியலுக்கு வர மாட்டேன் என்பதை நேரடியாகக் கூறாமல், மக்கள் எழுச்சி வந்தால் அரசியலுக்கு வருவேன் என்ற போர்வையில் சுற்றி வளைத்து வர மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ரஜினிகாந்தின் இன்றைய பேச்சை மக்களிடம் எடுத்துச் செல்ல, அவரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் பல இடங்களில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ஒருவர் தெரிவித்தார். எப்போதும் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, செய்தியாளர்களைக் கேள்வி கேட்க அனுமதிக்கும் ரஜினி, இன்று எதிர் கேள்விகளே இல்லாமல் செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் அரசியல் ஓரங்க நாடகம் நடத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
இனி மீண்டும் அவரை அரசியலுக்கு அழைப்பு விடுக்கும் படலங்கள்...
- இது முடிவல்ல தொடரும்
ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார், அரசியலுக்கு வருவாரா. மாட்டாரா?