நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கலையுலகில் 60 ஆண்டுகளை பூர்த்தி செய்திருப்பதால் அவரை கௌரவிக்கும் விதமாக 'உங்கள் நான்' என்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியைக் குறிப்பிட்டு, “எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென தமிழ்நாட்டில் 99% பேர் சொன்னார்கள். ஆனால் ஆட்சி கவிழாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்’ என்றார்.
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்ட சூழலில் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை மட்டும் அறிவித்துவிட்டு கட்சி தொடங்காமல் இருந்து வருகிறார். எனவே ரஜினி குறிப்பிட்ட அதிசயம் என்பது, ஏற்கனவே போருக்குத் தயாராக இருக்கும் அவர் விரைவில் போர்க்களத்திற்கு வர இருப்பதை காட்டுவதாக அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.