சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலகர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ஐபிஎஸ் சங்கத்தின் உறுப்பினர்கள் தன்னைக் குறித்து கேவலமாகவும், அவதூறாகவும் தவறான வகையிலும் செய்திகளைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில் தெரிவிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து அவர் எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டின் மூத்த ஐபிஎஸ் அலுவலரான தன் மீது சுமத்தப்படுபவை தவறானவை மற்றும் பொறுப்பற்ற தன்மையாக இருக்கிறது. இதுபோன்று கருத்துத் தெரிவிப்பது தன்னுடைய வாழ்க்கையிலும், சுதந்திரத்திலும், தனிப்பட்ட உரிமையிலும் தலையிடுவது போன்று இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட்டு, எனது பெயரைக் கெடுக்கும் அலுவலர்கள் மீது சட்டப்பூர்வமாகக் குற்ற அவதூறு வழக்குப் பதியவும், இழப்பீடு கேட்கவும் உரிமை இருப்பதாகக் கூறிய அவர், அதன் நிர்வாகியாக இருப்பவர் இதுபோன்று தன்னைப்பற்றி தவறாகப் பரப்பப்படும் செய்திகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில், அரசு விசாகா குழுவை அமைத்தது. மேலும், ராஜேஷ் தாஸை கட்டாய காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமில்லாமல் பெண் ஐபிஎஸ் அலுவலரைப் புகாரளிக்க விடாமல் தடுத்து நிறுத்திய செயலில், ராஜேஷ் தாஸுக்கு உதவிய அலுவலர்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.
இச்சூழலில், தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கம் புகார் தொடர்பாக நேற்று (பிப்.26) அறிக்கை வெளியிட்டது. விசாகா குழு தமிழ்நாடு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அதே நேரத்தில் விரைவாகவும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.