சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீர் உட்புகுந்ததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரின் அருகில் இருக்கும் நக்கீரன் நகரில் சசிகலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய சசிகலா, 'மழை வெள்ளத்தால் பாதிப்படைந்ததை எல்லாம் கணக்கில் கொண்டு, வீடுகளை இழந்து, நீரில் தத்தளிக்கும் மக்களையும் விவசாயிகளையும் காப்பாற்ற மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வேண்டிய நிதியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
'மீண்டும் இப்படி ஒரு நிலை வேண்டாம்'
ஒவ்வொரு சாலையிலும் நீர் எப்படி தேங்கியுள்ளது என்பதை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் தற்போது நேரிலேயே பார்த்துள்ளார்கள். அதனால் அவர்கள் மீண்டும் இது மாதிரி ஒரு நிலைமை ஏற்படாதவாறு நல்ல முறையில் பணிசெய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
'உரிய நிதியை வழங்குக'
மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதியை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மக்களைப் பாதுகாக்கவே அரசு உள்ளது. ஆகவே, வரும் காலங்களில் இது போன்று நிகழாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விரைவாக நிவாரண நிதியை மாநில அரசிற்கு கொடுக்க வேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்