சென்னை: பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தில்லைக்கரசி பேசும்போது, "தெலுங்கு-கங்கா திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஓராண்டிற்கு 12 டி.எம்.சி நீரை, நான்கு தவணைகளில் கொடுக்க வேண்டும். அதன்படி கடந்த மூன்று மாதங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் வெயில் தாக்கியது.
எனவே சென்னையின் மெட்ரோ ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக குறைந்தது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் சென்னை குடிநீர் வாரியம் இருந்தது. இந்த நிலையில், கடந்த 10 நாள்களில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அனைத்து மெட்ரோ ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி மற்றும் 300 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர்.
தற்போதைக்கு ஏரிகளின் நீர் இருப்பு போதுமானதாக இருப்பதால், தமிழக பொதுப்பணித்துறை ஆந்திராவின் நீர்ப்பாசன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கிருஷ்ணா நதிநீரை தற்போதைக்கு நிறுத்தும்படியும், தேவைப்பட்டால் நீரை திறந்து விடவும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிருஷ்ணா நதிநீரை முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். தற்போது பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் 450 கனஅடி நீர் வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னை மெட்ரோ ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 8 ஆயிரத்து 432 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது. ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது" என்று தெரிவித்தார்.