சென்னை: குமரிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஜூலை 7 - மழை பொழியும் மாவட்டங்கள்
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 8 - மழை பொழியும் மாவட்டங்கள்
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஜூலை 9 - மழை பொழியும் மாவட்டங்கள்
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக ஜூலை 10, 11 தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாலும், மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதனாலும் பொதுமக்கள் மலை ஏற்றத்தை தவிர்க்கவும்.
சென்னையில்..
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
"ஜூலை 9 முதல் 11ஆம் தேதிவரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதேபோல அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 8 முதல் 11ஆம் தேதிவரை தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூலை 7 முதல் 11ஆம் தேதிவரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.