சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை(ஜூலை 1) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஜூலை 2ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4ஆம் தேதி லட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும், இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு - விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்