சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும், நாளை மறுநாளும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், வெப்பநிலை குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 7-ம் தேதி வரை, 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்பென்சர் சந்திப்பு, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!