ரயில்களில் அதிக லக்கேஜ்களுடன் சென்றால் நாம் வண்டியைவிட்டு இறங்கியவுடன் நம்மை சுற்றிக்கொள்வார்கள் சிவப்புச் சட்டைக்காரர்கள். நமது பாவனைகளை வைத்தே லக்கேஜ்களைத் தூக்க நமக்கு உதவி தேவையா, இல்லையா என்பதை எளிதில் புரிந்துகொள்வார்கள்.
போர்ட்டர் என்றழைக்கப்படும் இந்த ரயில்வே கூலித் தொழிலாளர்கள் சரளமாக நான்கு, ஐந்து மொழிகளைப் பேசக்கூடியவர்கள். நாம் என்ன மொழி பேசுகிறோமோ, அதே மொழியில் நம்முடன் பேரம் பேசிக்கொண்டே நம்முடன் நடப்பார்கள், நாம் ஒப்புக்கொள்ளும் வரை!
ரயிலில் பயணிக்கும் அனைவரும் நிச்சயம் ஒரு முறையாவது அந்தச் சிவப்புச் சட்டைகளின் வேர்வையால் பயனடைந்திருப்பார்கள். ரயில் நிலையங்களில் ரயில்களுக்கு இணையாக துருதுருவென்று இருக்கும் அவர்களில் பலர், தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் மூன்று மாதங்களாகப் பொதுப்போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் இவ்வளவு காலம் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதில்லை.
இதனால் ரயில் நிலையங்களில் பணிபுரியும் போர்ட்டர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அவர்களுக்கு மாதச் சம்பளம், சலுகைகள் என எதுவும் இவ்லை. இந்தக் கரோனா ஊரடங்கு இவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமார் ஆயிரம் போர்ட்டர்கள் உள்ளனர். மேலும் எழும்பூர் ரயில் நிலையத்தில் 300 பேரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் 30 பேரும் செங்கல்பட்டில் 10 பேரும் உள்ளனர். சாதாரண நாள்களில் இவர்களுக்குச் சராசரியாக 500 முதல் 1000 ரூபாய் வரை கூலியாகக் கிடைக்கும்.
போர்ட்டர்களைப் போலவே ஒப்பந்த ஊழியர்களும் இந்த ஊரடங்கால் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இவர்களை அனைவரும் ஒருங்கிணைத்து ஒரு பொதுப் பதிவேட்டை உருவாக்குவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வாக இருக்கும் என்கிறார் தட்சன் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனைச் சேர்ந்த ஜானகிராமன். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "இந்திய ரயில்வேயில் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு லட்சம் வரை ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்கள் தற்போது பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளிகளுக்கு என்று தனியாக ஒரு பொதுப் பதிவேட்டை உருவாக்குவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வாக இருக்கும். ரயில்வே துறை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கும் தொகையில் சரியான பங்கு ஒப்பந்த ஊழியர்களுக்குச் செல்கிறதா என்பதை இதன்மூலம் கண்காணிக்க முடியும். ஆனால், இந்த ஊரடங்கால் வேலையிழந்த போர்ட்டர்களைப் பாதுகாக்க அரசும் ரயில்வே துறையும் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை" என்றார்
போர்ட்டர்கள் சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பேசிய பொய்யாமொழி, "என் 63 வருட சர்வீஸில் இப்படியொரு மோசமான நிலையை எதிர்கொண்டதில்லை. அதிகபட்சமாக ஓரிரு நாள்கள் ரயில்கள் ஒடாமல் இருந்துள்ளன. ஆனால், இவ்வளவு காலம் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்ததில்லை.
இதனால் ரயில்வே போர்ட்டர்களின் பெரும் இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கியே குடும்பத்தை நடத்திவருகின்றனர். மாநில அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் மட்டுமே தற்போது வரை உதவித்தொகையாகக் கிடைத்துள்ளது. ரயில்வே சார்பில் இதுவரை எந்த உதவித்தொகையும் வழங்கப்படவில்லை.
டிராலி போன்றவற்றின் வருகையால் போர்ட்டர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்றி தவித்துவருகிறோம். 2008ஆம் ஆண்டு அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், நாடு முழுவதும் இருந்த போர்டர்களை டிராக்மேன்களாக்கினார். இதன்மூலம் போர்ட்டர்களுக்கு நிரந்தர ஊதியம் கிடைத்தது.
அப்போது விடுபட்டவர்களையும் தற்போது புதிதாக உள்ளவர்களையும் நிரந்தர தொழிலாளிகளாக ரயில்வே பணியமர்த்த வேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கை" என்று பேசி முடித்தார்.
ரயில்களைப் போலவே ஓய்வின்றி இயங்கிய இந்தச் சிவப்புச் சட்டைக்காரர்களுக்கு இந்த ஊரடங்கு ஊதியமற்ற கட்டாய ஓய்வு அளித்துள்ளது. ரயில்களைப் போன்றே இந்த ஊழியர்களையும் காக்க ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: 'ஊரடங்கில் நின்றுபோன டயர் ரீடிரேடிங் தொழில்'