பார்சல் மேலாண்மைத் திட்டம்
நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் சிறிய சரக்குகள் பார்சல்களாக பதிவு செய்யப்படுகின்றன. முக்கிய நகரங்கள், நடுத்தர நகரங்களில் உள்ள சிறு-குறு வர்த்தகர்கள், தங்களுடைய உற்பத்திப் பொருள்களை முக்கிய வர்த்தக நகரங்களுக்கு வேகமாக, நம்பி, குறைந்த செலவில் அனுப்புவதற்கு இந்தப் பார்சல் சேவை உதவி புரிகிறது.
பொதுமக்களும் தங்கள் இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை அனுப்புவதற்கு இந்தப் பார்சல் போக்குவரத்து உறுதுணையாக உள்ளது. பார்சல் கட்டணம் அனுப்பப்படும் பொருள்களின் எடை, அளவைப் பொறுத்தே அமைகிறது. தற்போது ரயில்வே பார்சல் சேவை 'பார்சல் மேலாண்மைத் திட்டம்' என்ற பெயரில் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 84 ரயில் நிலையங்களில் பார்சல் பதிவும் போக்குவரத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக 143 ரயில் நிலையங்களிலும், மூன்றாவது கட்டமாக 523 ரயில் நிலையங்களிலும் பார்சல் சேவை கணினி மயமாக்கப்பட உள்ளது.
சிறப்பம்சங்கள்
பார்சல் மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் www.parcel.indianrail.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பார்சல்களை அனுப்ப 120 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பார்சல் அனுப்புவதற்கான ரயில் போக்குவரத்து வசதிகளை அறிந்து கொள்ளலாம். பதிவுபெற்ற வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலமாகவே பார்சல் பதிவு செய்ய விண்ணப்பம் அனுப்பலாம். அதன்மூலம் உத்தேச பார்சல் கட்டணத்தையும் அறிந்து கொள்ளலாம். .
பயணிகள் ரயில்களில் சரக்குகளை அனுப்ப பார்சல் வேன்கள் இணைக்கப்பட உள்ளன.
கணினி மயமாக்கப்பட்ட பார்சல் அலுவலகங்களில் பார்சல் பதிவு செய்யும்போது அந்தப் பொருள்களின் எடை குறித்த தகவல், மின்னணு எடை இயந்திரம் மூலமாக கணிப்பொறிக்கு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பார்சல்களின் மீது தனிக் குறியீடு (Bar code) இடுவதன் மூலம், இணைப்பில்லா சிறிய கருவியை (Hand held mobile device) அந்தக் குறியீடு மீது ஸ்கேன் செய்வதன் மூலம் அனுப்பப்பட இருக்கும் பார்சல் தொடர்பான பதிவு விவரங்களை அறிந்து கொள்வது எளிது. இந்த விவரங்களை இணையதள வசதி மூலம் மற்ற கணினிகளுக்கு மாற்றுவதும் சுலபம்.
பார்சல்களின் நிலவரம் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக
பார்சல் பதிவு செய்த விவரம், ரயிலில் ஏற்றப்பட்ட விவரம், குறிப்பிட்ட ரயில் நிலையத்துக்கு சென்ற விவரம் ஆகியவை உடனுக்குடன் குறுஞ் செய்திகளாக வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும்.
வாடிக்கையாளர்கள் அவர்களது பார்சல் எங்கு இருக்கிறது என்பதை www.parcel.indianrail.gov.in என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
கணினிமயமாக்கப்படாத ரயில் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பார்சல் விவரங்களையும், இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள முடியும்.
மேலும் நவீனப்படுத்த முடிவு
பதிவுபெற்ற செய்தித்தாள்கள், வார இதழ்கள் ஆகியவை ரயில் பார்சல் சேவை மூலம் மிகக் குறைந்த கட்டணத்தில் அனுப்பப்படுகின்றன. இதற்கும் இந்தத் திட்டம் பேருதவியாக இருக்கும்.
பதிவுபெற்ற ஒப்பந்தக்காரர்கள் ரயில்வே பார்சல் வேன்களை குத்தகைக்கு எடுத்து பெரிய அளவில் பார்சல்களை அனுப்பவும் உதவி புரியும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளையும் இந்தத் திட்டம் முறையாக பின்பற்றும்.
இந்தப் பார்சல் மேலாண்மை திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர் அளிக்கும் பின்னூட்டங்களை வைத்து இந்தத் திட்டத்தை மேலும் நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: மதுரை-மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில்