சென்னை: அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான பாபு முருகவேல், மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம், வழக்கறிஞர் செல்வம் உள்ளிட்டோர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் இல்லத்திற்கு வருகைதந்தனர்.
அப்போது அவர்களை உள்ளே அனுமதிக்காததால் காவல் துறையினருடன் ஆதிராஜாராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த பாபு முருகவேல் கூறுகையில், "அதிமுக தொண்டர்கள் பொன்விழா கொண்டாடி எழுச்சி பெறும் நேரத்தில் பொய்யான வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துகின்றனர்.
முறையற்ற முறையில் சோதனை
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. மேலும், சட்டப்படி வழக்குகளைச் சந்திக்கத் தயாராக உள்ளோம். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, மகள் ஆகியோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மனிதநேயமற்ற முறையில் சோதனை நடத்திவருகின்றனர்" என்றார்.
அதன்பின் பேசிய வழக்கறிஞர் செல்வம், "முன்னாள் அமைச்சர் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கும், குறிப்பிடப்பட்டுள்ள சொத்துகளுக்கும் சரியான ஆவணங்கள் உள்ளன. எனவே, மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. சட்டப்படி வழக்குகளைச் சந்திக்கத் தயாராக உள்ளோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆதிராஜாராம், "திமுக ஆட்சி முறையற்ற முறையில் நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்த செந்தில் பாலாஜிக்கு தற்போது அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஆட்சி என்றால், அது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான்" என்றார்.
இதையும் படிங்க: வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி சொத்து சேர்த்த விஜயபாஸ்கர்: எஃப்.ஐ.ஆரில் தகவல்