சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த பணிகளை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவருகிறது. வேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றுக்கு இடையே தேர்தல் நடத்துவதன் அவசியம் என்ன என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளை முன்வைத்துவருகின்றர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா புறநோயாளி பிரிவில் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று (ஜனவரி 31) ஆய்வுமேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது,
கரோனா இரண்டாவது அலையில் அதிக ஆக்சிஜன் தேவை இருந்தது. அது போன்ற நிலை தற்போது இல்லை. தேவையான அளவு ஆக்சிஜன் இருக்கிறது. 2,000 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 121 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதில் 65 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 16 பேர் முதல் தவணை செலுத்திக் கொண்டவர்கள். 40 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.
டெல்டா பாதிப்பு
நோய்த்தொற்றைப் பொறுத்தவரை டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருந்தது, தற்போது குறைந்துவருகிறது. கிருஷ்ணகிரி, நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தொற்று அதிகமாக இருக்கிறது.
நோய்த்தொற்றைப் பொறுத்தவரை ஐந்து விழுக்காட்டினர்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். 95 விழுக்காட்டினர் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் 80 விழுக்காடு ஒமைக்ரான் பாதிப்பு இருந்தாலும், மீதமுள்ளது டெல்டா பாதிப்பே ஆகும்.
தமிழ்நாட்டில் டெல்டா இன்னும் முழுமையாக வெளியேறவில்லை. நோய்ப் பரவல் பற்றி மத்திய, மாநில அரசுகள், உலக சுகாதார நிறுவனம் தெளிவான கருத்துகளைப் பதிடுவிடுன்றன. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பதிவுகளில் கவனம் தேவை
பொது இடங்களில் தளர்வுகள் அளித்த பின்னர் பொதுமக்கள் கூட்டமாகச் செல்லாதீர்கள். தேர்தலுக்கு நோய்ப் பரவலுக்கும் சம்பந்தம் இல்லை. கூட்டம் அதிகமாக இருந்தால்தான் நோய்த்தொற்று அதிகரிக்கும். எனவே, சமூக வலைதளங்களில் கவனமாகச் செய்திகளைப் பகிருங்கள்; தவறான செய்திகளைப் பகிராதீர்கள்.
தமிழ்நாட்டில் காய்ச்சல் தொற்று குறைந்துவருகிறது. இந்த நிலையிலும் ஆன்லைனில் மாணவர்கள் படித்தால் பாதிக்கப்படுவார்கள், அவர்களது படிப்பு பாதிக்கப்படும் என்று குழந்தைகள் மன நல வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஒருவேளை ஏதாவது ஒரு பள்ளியில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வல்லுநர்களின் ஆலோசனை
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் முறையில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது என உலக சுகாதார அமைப்பில் பல நாடுகள் அறிவுறுத்திய நிலையில்தான், வல்லுநர்கள் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பை மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என உத்தரவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சூயஸ் திட்டத்தின்கீழ் குழாய் அமைக்க எதிர்ப்பு: பள்ளி மாணவர்கள் மீது வழக்கு