புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறின்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். இதனை ஆளுநர் கிரண்பேடி ஏற்க மறுத்தார். மோசடியைத் தடுக்கும் வகையில் அரிசிக்கு பதிலாக பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவதால், பொதுமக்களுக்கு காலத்தோடு பணம் போய் சேருவதோடு, பொதுமக்களே தரமான அரிசியை வாங்கிக் கொள்வார்கள் எனவும் கிரண்பேடி தெரிவித்தார்.
எனவே, இறுதி முடிவு வரும் வரை தற்போதைய நடைமுறைப்படி அரிசிக்கான பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி சிவகார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து முடிவு செய்ய முதற்கட்ட விசாரணை நடந்தது. அதனடிப்படையில் தற்போது புதுச்சேரி முதலமைச்சர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணைக்காக வழக்கை பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டெண்டர் முறைகேடு - அறிக்கையளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!