புதுச்சேரி: கருவடிக்குப்பம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இருளர், நரிக்குறவர் மக்கள் வாழும் பகுதிகளை தமிழிசை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
அப்போது அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “இருளர், நரிக்குறவர் இன மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக ஒரு குடும்பம் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள், கரண்டிகள், தட்டுகள், கிருமிநாசினி, நாப்கின்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத் தொழிலுக்கு ஏற்பாடு
அவர்களது வீடுகளில் மழைநீர் ஒழுகுவதால், உடனடியாகத் தற்காலிக ஏற்பாடாக தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன. நிரந்தர குடியிருப்புகள் கட்டவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குழந்தைகள் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகள் தொடர்ந்து படிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அவர்களுடைய வாழ்விடம் மேம்படுத்தப்பட்டு, மரியாதைக்குரிய ஒரு வாழ்வு அமைய வேண்டும்.
கைத்தொழில் பயிற்சி, குழந்தைகள் படிக்க வசதி, குழந்தைகள் காப்பகத்திற்குத் தேவையான வசதிகள், சுத்தமான உடை, மருத்துவம், வாழ்விடத்தைச் சுத்தமாக வைத்தல், மாற்றுத்தொழில் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.
வேலைவாய்ப்புக்கு நடவடிக்கை
சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தொடர்ந்து பல உதவிகளைச் செய்துவருகிறார். இங்குள்ள குழந்தைகள் சமையல் கலை (கேட்டரிங்), செவிலியர் (நர்சிங்) போன்ற கல்விகளைப் பயின்றுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
இதையும் படிங்க: உழவருக்கு உடனடி நிவாரணம் - ஸ்டாலின் உறுதி