தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இன்று 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் இரண்டு பேர் மரணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 109 பேருக்கு ரத்தப்பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரத்து 520 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 46 ஆயிரத்து 985 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 457 பேர் சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் 14 நாள்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்து 43 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே இடத்தின் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 302ஆக உள்ளது. மேலும், இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் கரோனா பாதிப்பில் தமிழ்நாடு நாட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேவேளை, சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்தவர்களை வீட்டிற்கு அனுப்புவதில் முதலிடத்தில் இருக்கிறோம். இறப்பு விகிதத்தையும் கட்டுக்குள் வைத்து இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி!