கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துவருகிறோம்.
தமிழ்நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள வெளிமாநிலங்களிலிருந்து வரும் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனர். கேரளாவிலிருந்து வருபவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட பிறகே தமிழ்நாட்டில் அனுமதிக்கிறோம். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்பதை சுகாதாரத் துறை வேண்டுகோளாக விடுக்கிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தாலும் அதனை ரத்து செய்ய வேண்டும். நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் இன்று மாலை வீடு திரும்புவார். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 880 பயணிகளை சோதனை செய்துள்ளோம். 1,975 பேர், வீடுகளில் தொடர் கண்கணிப்பில் உள்ளனர். அவர்களில் தற்போது 11 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் உள்ளனர்.
தற்பொழுது வரையில் முககவசம் அணிய வேண்டிய நிலை வரவில்லை. பொதுமக்கள் வெளி இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை நன்றாக சோப்புப் போட்டு கழுவினால் போதுமானது. யாரும் அச்சமடையும் நிலை தமிழ்நாட்டில் வரவில்லை” என்றார்.
இதையும் படிங்க: கொரோனா முன்னெச்சரிக்கை : கேரளா வாகனங்கள் சோதனைக்கு ஒத்துழைப்பதில்லையா?