தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து சேவை பாதிப்படைந்துள்ளது.
இதனால் இன்று காலை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைவிட குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு உரிய நேரத்திற்குப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர். பேருந்து சேவை இல்லாத பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.சென்னையில் 56 விழுக்காடு பேருந்துகள், மதுரையில் 15 விழுக்காடு புறநகர்ப் பேருந்துகள், கோவையில் 60 விழுக்காடு பேருந்துகள் இயங்கிவருகின்றன. திருப்பூரில் 80 விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை.
காஞ்சிபுரத்தில் 25 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 418 (237 நகர் + 181 புறநகர்) பேருந்துகளில் 80 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. கரூரில் 85 விழுக்காடு, பொள்ளாச்சியில் 20 விழுக்காடு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.