சென்னை: வண்ணாரப்பேட்டை காட்படா பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் மழைநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மழை நின்று சில தினங்கள் ஆன நிலையில் இன்னும் மழைநீரும், கழிவு நீரும் சாலைகளில் தேங்கியிருப்பதால் அதனை கண்டித்தும், உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும் அப்பகுதி மக்கள் 200திற்க்கும் மேற்பட்டோர் வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் முன்பாக திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் காவல் துறையினரும், மாநகராட்சி அலுவலர்களும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலை கைவிட பொதுமக்கள் மறுத்துவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் மழை நீர் தேங்கிய இடத்திற்கு சென்று பார்வையிட்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சாலைகளில் தேங்கிய கழிவு நீர் கலந்த மழைநீர் அகற்றும் பணி தொடங்கியது.
அதன்பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு எச்சரிக்கை: மீண்டும் வருகிறது கனமழை