சென்னை: பெண்கள் குறித்து இழிவாகப் பேசி தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியதாகக் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பப்ஜி மதன் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். குறிப்பாக இவர் மீது பல புகார்கள் வந்ததால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதனுக்குக் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் திடீரென பப்ஜி மதனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் சிறைக்குள் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக அவரது மனைவி கிருத்திகா சிறைக்குள் பணிபுரியும் சிறைத் துறையினரிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
சிறைத்துறை டிஐஜி தலைமையில் விசாரணை
மூன்று லட்சம் ரூபாய் அதிகமாகத் தொகை என்பதால் சொந்த ஊரான சேலத்தில் தயார் செய்துகொண்டிருப்பதாகவும், சில நாள்களில் கொடுத்துவிடுவதாகவும், மதனைப் பத்திரமாகத் தனிமைப்படுத்திப் பார்த்துக் கொள்ளுமாறும் கிருத்திகா சிறைப் பணியாளரிடம் பேசுவதுபோல் பதிவாகி உள்ளது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறைத்துறை டிஜஜி தலைமையில் விசாரணை குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
சொகுசு இடங்களாக மாறும் சிறைகள்
ஏற்கனவே சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அதிகளவு புகார்கள் டிஜிபிக்கு வருவதால் திடீர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு செல்போன், போதைப்பொருள்கள் பறிமுதல்செய்வது வழக்கமாக இருந்துவருகின்றன.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன், கர்நாடக சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கைதிகளின் உறவினர், மனைவிகளிடம் சிறைப் பணியாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்துதரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேலுநாச்சியாருடன் வந்து வேட்புமனு தாக்கல்: தேமுதிக வேட்பாளர் விநோதம்