கரோனாவிற்கு சுய சிகிச்சை செய்திடக்கூடாது எனவும், நீராவி நுகர்தல் சிகிச்சை முறையை கரோனா சிகிச்சைக்கு பின்பற்றக்கூடாது போன்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்தியில், ”தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவாமல் தடுத்தல், கரோனாவிலிருந்து காத்துக் கொள்ளுதல், கரோனாவிலிருந்து குணமாக கரோனா வைரஸைக் கொல்லுதல் என்ற பெயரில் நீராவி நுகர்தல் சிகிச்சை முறை பரவி வந்தது.
இந்த மருத்துவ முறை, அறிவியல் அடிப்படையற்றது. நீராவி நுகர்தல் சிகிச்சை முறை, கரோனா பரவலையோ அல்லது கரோனா வைரஸைக் கொல்லவோ பயன்படாது, மாறாக இது கரோனா வைரஸ் பலருக்கும் மிக வேகமாக பரவும் வாய்ப்பையே ஏற்படுத்தும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கூறி வந்தது. இது போன்ற அறிவியல் ஆதாரமற்ற முறைகளைக் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இத்தகைய மருத்துவ முறை கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் மருத்துவர்களின் ஆலோசனையின்றி, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பி சுயமாக சிகிச்சைகளை பொதுமக்கள் மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் வெளியிட்டுள்ளது. இதை சமூக, சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மனமாற வரவேற்கிறது. பாராட்டுகிறது.
கரோனாவைத் தடுப்பதற்கும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி காப்பதற்கும் அறிவியல் பூர்வமாக நிரூபணமான மருத்துவ நடைமுறைகளே உதவிகரமாக இருக்கும். இதை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்திக் கூறி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு, அறிவியல் ரீதியான நிரூபணமான மருத்துவ முறைகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் பொது மக்கள் நலன் கருதி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேலும், மருத்துவக் கல்வி உள்பட கல்வியை காவிமயமாக்கும், கார்ப்பரேட் மயமாக்கும், கல்வியில் மாநில உரிமைகளை முற்றிலும் ஒழித்துக் கட்டும், குலக் கல்வி முறையை மீண்டும் திணிக்கும், சாதி அடிப்படையிலான பரம்பரை தொழிலை மறைமுகமாக ஊக்கப்படுத்தும், தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ நடைமுறைப் படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்திருப்பது பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பொது இடங்களில் ஆவி பிடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்