சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக ராமு மணிவண்ணன் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகை மற்றும் பிற பணப்பலன்களை வழங்கவேண்டுமென நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்நிலையில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் இந்த ஆண்டு ஓய்வு பெறும் நிலையில் அவருக்கான ஓய்வூதிய நிலுவை தொகை ரூ.18 லட்சம், 7 மாதங்களுக்கான ஊதியம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படாமல் உள்ளது. இதனை தனக்கு வழங்க வேண்டும் என தனது அறையில் இன்று (ஜன.21) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவருடன் பல்கலைக்கழக அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், இரவு 8 மணிக்கு பேராசிரியர் ராமு மணிவண்ணன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிச் சென்றார்.
இது குறித்து பேரா. ராமு மணிவண்ணன் கூறும்போது, "எனக்கு வர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை வழங்க வேண்டி காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டேன். பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியதன் அடிப்படையில் எட்டு மணிக்கு போராட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்கிறேன்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உடன் நாளை (ஜன.22) பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அப்பொழுது எனக்கு உரிய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் தணிக்கைத் துறையின் அனுமதி பெற்ற பின்னரே வழங்கப்படும். தணிக்கைத் துறையில் கூறப்பட்டுள்ள திருத்தங்களை அவர் ஏற்றுக் கொண்டவுடன் அவர் கூறிய முழு சம்பளத் தொகை மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விதை உண்டியல்; மண்ணை காக்கும் மாற்றுத்திறன் தொழிலாளி!