இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவிவருகிறது. இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 10 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு முழு உடல் கவசம், முகக்கவசம் ஆகியவை அதிகமாக தேவைப்படுகின்றன.
இதனையடுத்து மேற்கண்ட கவசங்களை தயாரிக்க, ஆவடியில் உள்ள படைத்துறை உடைத் தொழிற்சாலைக்கு (ஓ.சி.எப்) பாதுகாப்புத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இத்தொழிற்சாலைக்கு 30 ஆயிரம் முழு உடல் கவசம் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்தக் கவசங்களை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் இரு ஷிப்டாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக 1,100 முழு உடல் கவசத்தை தொழிலாளர்கள் தயாரித்துள்ளனர். அதற்கு கோவையிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) ஆய்வகத்தில் தரச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த உடல் கவசத்தை படைத்துறை உடைத் தொழிற்சாலையின் பொது மேலாளர் சுர்ஜித் தாஸ், லாரி மூலம் மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைத்தார். அப்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் ஸ்ரீகுமார், வேலுச்சாமி, வில்சன், பணிக்குழு செயலாளர் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ஆவடி, ஓ.சி.எப் தொழிற்சாலையில் 3 நாட்களுக்கு ஒருமுறை முழு உடல் கவசத்தை தயாரித்து அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி வாரத்திற்கு இரு முறை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முழு உடல் கவசங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மருத்துவர்களுக்கு தேவையான 2 லட்சம் முகக் கவசங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய அரசின் தனியார்மயமாக்கல் கொள்கையால், ஓ.சி.எப் தொழிற்சாலை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, நாட்டின் அவசியமான காலகட்டத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டுள்ளது என்றனர்.
இதையும் படிங்க: வங்காளக் காற்று, பறவைகளின் பாட்டு - மாடியில் நேரத்தைக் கழிக்கும் சென்னைவாசிகள்