சென்னை: பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் கோபி(43). தொழிலதிபரான இவர் அரசு 'பிலிம்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். நடிகர் விமல் தன்னிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் கோபி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மன்னர் வகையறா தயாரிப்புக்கு...: அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு நடிகர் விமல் தன்னை அணுகி, 'மன்னர் வகையறா' திரைப்படத்தை தானே தயாரித்து நடிக்க இருப்பதாகவும், அதற்கு 5 கோடி ரூபாய் கொடுத்து உதவுமாறும் கேட்டார். மேலும், பட வெளியாவதற்கு முன்னரே லாபத்துடன் கடன் தொகையை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்ததார்.
கடன் பாக்கி: இதனை நம்பி, நடிகர் விமலிடம் 5 கோடி ரூபாய் கொடுத்து, அதற்கான ஒப்பந்தத்தையும் போட்டு கொண்டேன். 'மன்னர் வகையறா' படம் வெளியாகி நல்ல லாபம் கிடைத்த போதிலும், தன்னிடம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்தார். பல மாதங்கள் கழித்து, கடன் தொகையில் 1.30 கோடி ரூபாயை திருப்பி கொடுத்த நடிகர் விமல், மீதி தொகையை 6 மாதத்திற்குள் தருவதாக தெரிவித்தார்.
செப்டம்பரில் பேச்சுவார்த்தை: பின்னர் பொய்யான காரணங்களை கூறி விருகம்பாக்கத்தில் தன் மீது விமல் புகார் அளித்துள்ளார். இதனால், தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், விமலுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இறுதியாக 3 கோடி ரூபாய் தருவதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டார்.
கொலை மிரட்டல்: இந்நிலையில், விமல் குறிப்பிட்டது போல் இன்று வரை பணம் தராமல் ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து, விமலிடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கிறார். கடந்த 4 வருடங்களாக, பணத்தை தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்"என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மிஸ்டர் லோக்கலும் நீதிமன்ற வழக்கும்! - இது சிவகார்த்திகேயனின் 'மான் கராத்தே'