கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 93ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்திற்கு வர 25 நிமிடம் காலதாமதமானது.
நீதிபதி காட்டம்
பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த நீதிபதி, தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர், அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அழகிரி அறிக்கை
இதை விமர்சித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் பொங்கி எழுந்துள்ளதாகவும், உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறி பேசியது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் அளித்திருந்த புகாரில், கே.எஸ் அழகிரியின் இந்த அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று (அக். 4) தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார். இதை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷாருக்கான் மகனுக்கு அக். 7 வரை காவல் நீட்டிப்பு