முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் பயனாளிகளுக்கும், பொது மக்களுக்கும் கட்டண உச்சவரம்பை நிர்ணயித்து, சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இத்தொகை மிகக்குறைவாக இருப்பதாகக் கூறி, இந்திய தனியார் மருத்துவமனைகள் சங்க தமிழ்நாடு பிரிவு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அதில், ” கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோருக்கான கட்டணம், உண்மையான செலவுகளின் அடிப்படையில் கணக்கிட்டு நிர்ணயிக்கப்படவில்லை. மருத்துவமனைகளுடன் கலந்தாலோசிக்கப்படவுமில்லை.
கரோனாவுக்கு ஐந்து பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய சுழலில், ஒரு பரிசோதனைக் கருவியின் விலை 3,000 ருபாய் வரை ஆகிறது. மருத்துவமனை அறைகளின் வாடகை ஒரு நாளுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை உள்ளது. நூறு படுக்கை கொண்ட மருத்துவமனைகளுக்கு 200 முழு உடல் கவசங்கள் தேவைப்படும். அவற்றின் விலை 750 முதல் 1,000 ரூபாய் வரை ஆகும். 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை மருந்துகளின் விலை உள்ளது.
எனவே, தன்னிச்சையாக பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கான கட்டணங்களை முறையாக கணக்கிட்டு நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும். 2017 இல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உண்மையான செலவுகளின் அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் ” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, இது குறித்து ஜனவரி 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அங்கன்வாடி மைய அலுவலகத்தை தொடங்கிவைத்த ஸ்டாலின்