சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில், சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கம்பெனிகள் இயங்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அனகாபுத்தூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள், அங்கு சென்று பார்த்தபோது உரிய பாதுகாப்பின்றி தனியார் நிறுவனம் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து நகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ஷட்டரை மூடிய நிலையில் உள்ளே தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அங்கு பணிபுரிந்து வந்த 100க்கும் மேற்பட்டவர்களை வெளியே அப்புறப்படுத்திவிட்டு, அனுமதி இல்லாமல் இயங்கி வந்த தனியார் நிறுவனத்திற்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
“கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அனுமதியின்றி பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதிகளில் சில தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை நகராட்சி அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பல்லாவரம், அனகாபுத்தூர் பகுதியில் அதிக அளவில் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இதன் காரணமாக, அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கைது செய்யும்போது காவல் துறையினர் மேற்கொள்ளவேண்டியவை என்ன?' - டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை