சென்னை: பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, இந்த நாள்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். பேருந்துகளில் இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்படும். தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும் ஏற்படும்.
ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பயணிப்பது தற்போது குறைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததாலும் மக்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேற தயக்கம் காட்டுவதாலும், பேருந்து இயக்கத்தில் மந்தம் ஏற்பட்டுள்ளது. அப்படி வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது இந்நாளில் ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்.
ஆனால் தற்போது 250 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேபோல நாளை தினம் 410 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அத்துடன் வரும் 13ஆம் தேதி 460 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவிக்கையில், "தற்போது இயக்கப்படும் 250 பேருந்துகளில் 80 விழுக்காடு பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பேருந்துகள் சென்னையில் அம்பத்தூர், ரெட் ஹில்ஸ், தண்டையார்பேட்டை, எக்மோர் மற்றும் கோயம்பேட்டிலிருந்து தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது 25 விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால், இந்த விழுக்காடு 50ஆக உயர வாய்ப்புள்ளது. மேலும், ஐடி ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் சென்று பணியாற்ற தொடங்கினால் இயக்கம் 100 விழுக்காட்டை அடையும்.
தற்போதுள்ள நிலைமை மோசமாக இருந்தாலும் தீபாவளி பண்டிகையோடு ஒப்பிடுகையில் மக்கள் பயணிப்பது சற்று அதிகரித்துள்ளது. மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதால், பேருந்து கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் 4 ஆயிரம் தனியார் பேருந்துகள் உள்ள நிலையில் எங்கள் தொழில் தற்போது முடங்கியுள்ளது எனவே அரசு சாலை வரி உள்ளிட்டவற்றை குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு மாநகரப் பேருந்துகள் இயக்கம்