சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரைசெய்ய பாஜக தேசியத் தலைவர்கள் தமிழ்நாடு வரவிருக்கின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் முருகன் தாராபுரத்தில் போட்டியிடுகிறார், அவரை ஆதரித்து மார்ச் 30ஆம் தேதி தாராபுரத்திலும், ஏப்ரல் 2ஆம் தேதி நாகர்கோவிலில் கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்தும்; விளவங்கோடு, குளச்சல் வேட்பாளர்களை ஆதரித்தும் பின்பு மாலையில் மதுரையிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.
மார்ச் 26ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவும், ஏப்ரல் 1ஆம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கின்றனர்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பரப்புரையில் ஈடுபட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையொட்டி சென்னையில், அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட உள்ள இடங்கள், அங்கு வரவுள்ள பொதுமக்களின் எண்ணிக்கை குறித்தான விவரங்களைச் சமர்ப்பிப்பதற்காக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகைதந்தார். மேலும் பரப்புரையில் ஈடுபட உள்ள மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கக்கோரியும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'வானதி அக்கா ஜிந்தாபாத், சப்போர்ட் ஃபார் வேலுமணி' - பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் வடமாநிலப் பெண்கள்