ஒமைக்ரான் தாக்கம்: பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - covid 19 impacts in india
ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடுமையாக மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: உருமாற்றம் அடைந்த கரோனா தொற்றுக்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து சென்னை, திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, அவர்களின் மரபணு மாற்றம் குறித்து பரிசோதனை நடைபெற்றுவருகிறது.
இதன் தாக்கத்தைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்று விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.
அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவும், ஆன்லைனிலும் நடைபெறலாம்.
பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தகுந்த இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும், நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.