சென்னை: குடியரசு தலைவர் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, சென்னை சட்டப் பேரவை வளாகத்தில் அமைந்துள்ள "குழுக் கூட்ட அறையில்" காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலை நடத்த சட்டமன்றப் பேரவைச் செயலாளர் முனைவர் கி. சீனிவாசன் மற்றும் சட்டமன்றப் பேரவைச் செயலக இணைச் செயலாளர் இரா. சாந்தி ஆகியோர், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேற்கூறிய இடத்தில் வாக்களிக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற மாநில உறுப்பினர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றபின் மேற்கூறிய இடத்தில் வாக்களிக்கலாம். இவர்களில் எவரேனும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க விரும்பினால், அதனை "படிவம்-எ" வாயிலாகவும் அல்லது பிற மாநில சட்டமன்றப் பேரவைச் செயலக வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் வாக்களிக்க விரும்பினால், அதனை "படிவம்-பி" வாயிலாகவும், நியாயமான காரணங்களுடன் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தினை சென்றடையும் வகையில், கீழ்க்காணும் முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும்: சுமன் குமார் தாஸ், செயலாளர், நிர்வச்சன் சதன், அசோகா சாலை, புதுதில்லி 110 001 (மின்னஞ்சல்: skdas@eci.gov.in/president-cell@eci.gov.in)
சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வரும்போது அவர்களுடைய அடையாள அட்டையை உதவி தேர்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும் அல்லது வாக்களிக்க ஏதுவாக உதவி தேர்தல் அதிகாரி ஏற்கும் வகையில், தான் வாக்காளர் என்பதை நிரூபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீடியோ: நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்திய குஷ்பு