தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் மின் பயனீட்டாளர்களிடம் அதிகமான மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும், தமிழ்நாடு மின் வாரியம் தரப்பில் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே பயனீட்டாளர்களிடம் வசூலித்து வருவதாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு மின் விநியோகம் மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பொறுப்பு வகித்துவந்த விக்ரம் கபூர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பொறுப்பிலிருந்த கூடுதல் தலைமைச் செயலர் விக்ரம் கபூர், சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலைத்துறைச் செயலராகப் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலராகப் பொறுப்பு வகித்த ஷம்பு கல்லோலிகர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைச் செயலராக நியமனம் செய்யப்படுகிறார். அதன்படி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலராக சந்தீப் சக்சேனா நியமனம் செய்யப்படுகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக பொறுப்பு வகித்து வரும் பிரதீப் யாதவ், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
உள்துறைச் செயலராகப் பொறுப்பிலிருக்கும் எஸ்.கே. பிரபாகர், எரிசக்தி துறையின் செயலராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது.