சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தபால் வாக்கு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. தபால் வாக்குகள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சேலத்தில் அதிகபட்ச தபால் ஓட்டுகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை 234 தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 497 தபால் வாக்குகள் செலுத்தவுள்ளனர். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 658 தபால் வாக்குகளும், குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 562 தபால் வாக்குகளும் உள்ளன.
தபால் வாக்கு
இந்நிலையில், சென்னையில் உள்ள 7300 தபால் வாக்குகள் பெறும்பணி நேற்று முதல் (மார்ச் 26) தொடங்கியது. மேலும் சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்கு செலுத்தினர்.
ஏப். 5ஆம் தேதிக்குள் தபால் வாக்கு முடிக்க திட்டம்
தபால் மூலம் வாக்களிக்கும் நபர்கள் வீடுகளுக்கு, இரண்டு தேர்தல் அலுவலர்கள், நுண் பார்வையாளர், காவலர், வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் நேரடியாகச் சென்று தபால் வாக்கு சீட்டுகளை வழங்கி, வாக்களித்த பின்னர் முறையாக மடித்து அதற்குமேல் சீல் வைத்து அங்கிருந்து சென்றனர்.
இவ்வாறாக ஒவ்வொரு தபால் வாக்காளர்கள் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. தபால் வாக்குப்பதிவு ஏப்ரல் 5ஆம் தேதிக்கு முன்னர் நிறைவடைகிறது.