சென்னை நேரு விளையாட்டரங்கில், இந்திய அஞ்சல் துறை சார்பில் மேஜைப் பந்து போட்டிகளின் தொடக்க விழா நடைபெற்றது. 20 ஆண்டுகளில் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறும் இப்போட்டியை சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சர்வதேச மேஜைப் பந்து வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான அந்தோணி அமல்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவின் போது உரையாற்றிய அந்தோணி அமல்ராஜ், தன்னுடைய விளையாட்டுத்தான் தன்னை இந்த நிலைமைக்கு உயர்த்தியது என்று குறிப்பிட்டார். மேஜைப் பந்து தர வரிசையில் 30ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 18ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகக் கூறிய அவர், வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு விளையாட வேண்டும் என்றார்.
குட்டி ரசிகையை சந்தோஷப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்!
பின்னர் உரையாற்றிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், சென்னை பாதுகாப்பான நகரம் என்றும், மெரினா மாமல்லபுரம் மட்டுமல்லாது புராணச் சின்னங்கள் நிறைந்திருக்கும் காஞ்சிபுரத்தையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
விளையாட்டு வீரர்களுக்கு இந்தப் பயணம் அமைதியானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்க வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அஞ்சல் துறை குறித்த தன்னுடைய கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்தார்.
1983ஆம் ஆண்டு பயிற்சி காலத்தில் தனக்கு நிறைய கடிதங்கள் வரும் என்றும், டெல்லி என்று முகவரியில் எழுதப்படாமல் இருந்தாலும் குறிப்பிட்ட முகவரிக்கு கடிதம் வந்து சேர்ந்துவிடும் என்றும் கூறிய அவர், மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த சிறப்பானத் துறை அஞ்சல்துறை என்று கூறினார்.