சென்னை ஐஐடியின் 58ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் பூப்பந்து உலக சாம்பியனும் சிந்து கலந்துகாெண்டு சிறப்புரை வழங்கினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரியப் பரியத்தின் படி நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். ஆனால் சமஸ்கிருதம் பாடலுடன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு பல்வேறுத்தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
பாமக நிறுவனர் ராமதாஸ்
ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், “சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஐஐடியில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதை கடுமையாக கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐஐடி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது. 2019ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐஐடி மாற்றக்கூடாது. தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கண்டிப்பாக பாடப்படவேண்டும். தமிழ்நாடு அரசு பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
அதேபோல், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த20ஆம் தேதியன்று நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் மொழி வாழ்த்துப் பாடப் பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு ஆணையை அலட்சியப்படுத்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். முதல் தடவையல்ல இப்படி தமிழ் வாழ்த்தைப் புறக்கணிப்பது; (சமஸ்கிருதப் பாடல் பாடப்பட்டது) முன்பும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் அங்கே நடந்தேறியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் ஆணையைப் பின்பற்றவோ- மதிக்கவோ ஐஐடி என்ற உயர் சாதி பார்ப்பன ஆதிக்க வல்லாண்மை தயாராக இல்லை என்பது ஏற்கத்தக்கது தானா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும் உரிய கண்டனத்தைப் பதிவு செய்வது முக்கியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் பதில்
அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. ஐஐடியில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதனை ஒன்றிய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, 'உயர்கல்வி நிறுவனம் சமூகத்தின் ஒரு அங்கம். உயர் கல்வி நிறுவனம் அமைந்துள்ள சமூகத்தின் பண்பாட்டினை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றை தனது பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும்.
அந்த மக்களின் பண்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல், ஏதோ வானத்தில் இருந்து திடீர் என குதித்தது போல் , ஏதோ ஒரு உலகிற்கு மக்களை தயார் செய்து அனுப்புவது போல் ஒரு உயர்கல்வி நிறுவனம் நடந்துக் கொள்ளுமேயானால், அது நிச்சயமாக அரசமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயக மாண்பிற்கு முன்வைக்கும் பன்முகத் தன்மையை கொண்டதாக இருக்க முடியாது.
அரசுக்கு கோரிக்கை
சென்னை ஐஐடி தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உயர் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவது மரபாக இருக்கிறது.
இதனைப் பின்பற்ற மட்டேன் என சென்னை ஐஐடி கூறினால், அதற்கு ஏதாவது ஒரு சரியான காரணத்தைக் கூற வேண்டும்.
இந்தியாவில் உள்ள மாநிலத்தில் தமிழ்நாடு இருக்கிறது என்பதையும், தமிழ் ஆட்சி மொழி அட்டவணையில் உள்ளது என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும். அந்த நிறுவனம் அமைந்து இருக்கக்கூடிய மாநிலத்தின் மொழியை வாழ்த்தும் பாடலைப் பாடுவது எந்த விதத்தில் கல்வியைப் பாதிக்கும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்த்தை சென்னை ஐஐடி புறக்கணிப்பதில் இருந்து அவர்கள் இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசு சென்னை ஐஐடி நிர்வாகம் அலுவல் சார்ந்த அனைத்து நிகழ்விலும் தழிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதை மரபாக கடைபிடிக்க வலியுறுத்தி கடிதம் எழுத வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதே நோக்கம்- மனோ தங்கராஜ்