சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த பொது நல மனுவில், அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொது மக்களை காவல்துறையினர் தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என, காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றிய 4 லட்சத்து 32 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்சத்து 79 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஊரடங்கு காலத்தில் பொது மக்களும் சமூக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா சோதனைகளை அதிகரிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்!