கோயம்புத்தூர்: ஆன்லைன் லாட்டரி போன்ற பல வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம் மற்றும் அவரது அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் மார்ட்டின் இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை செய்து வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட், கட்டுமான தொழிலும் செய்து வருகிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்ததுள்ளது, உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் இவர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியதும் தெரியவந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீஸில் உள்ள அதிகாரிகள் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, "2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொல்கத்தாவில் உள்ள பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற 15 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்தது.
சொத்துகள் முடக்கப்பட்டது ஏன்?
அதில் விற்கப்படாத லாட்டரி சீட்டுகளை தக்கவைத்துக்கொண்டு, அவற்றுக்கு பரிசு விழுந்ததாகக் காட்டுவது, விற்கப்படாத லாட்டரிகளை விற்றதாகக் காட்டுவது ஆகிய குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டன. இதனையடுத்து சுமார் ரூ. 400 கோடி மதிப்புள்ள இவரின் சொத்துகள் முடக்கப்பட்டன.
எத்தனை இடங்களில் சோதனை?
இந்நிலையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலக்கத்துறை அலுவலர்கள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை துடியலூர் வெள்ளைகிணறு பகுதியில் உள்ள தொழிலதிபர் மார்டின் இல்லத்திற்கு இன்று காலை இரண்டு வாகனங்களில் வந்த அமலாக்கதுறை அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்." என அதிகாரிகள் கூறினர்.
இதே போல கோவையில் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியிலும் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க |
கோவை மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால், ஹோமியோபதி மருத்துவ மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்துக்கு செல்ல முடியாமல் வாயிலேயே நின்று வருகின்றனர். ஹோமியோபதி கல்லூரி வாயிலில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவையில் இவருக்குச் சொந்தமான 3 இடங்களில் இந்த சோதனையானது தற்போது நடந்துவருகிறது.
கடந்த ஆண்டில் எவ்வளவு சிக்கியது?
2023ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை மார்ட்டின் குழும நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 400 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு இருந்தது.
அப்பொழுது கைப்பற்றப்பட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் அமலாக்கத்துறையினர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.