சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் நடந்த போராட்டத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் 'மெரினா புரட்சி' என்ற ஆவணத்திரைப்படமாக தயாரித்திருந்தனர். M.S.ராஜ் இயக்கியிருந்தார். கடும் போராட்டத்திற்குப் பிறகு தணிக்கை பெற்ற 'மெரினா புரட்சி' நார்வே, கொரிய திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.
தற்போது நாச்சியாள் பிலிம்ஸும் தருவை டாக்கீஸும் இணைந்து 2018 மே மாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை 'முத்துநகர் படுகொலை' (PEARLCITY MASSACRE) என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளனர். மெரினா புரட்சியை இயக்கிய M.S.ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் முதல் பார்வை (First Look) வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய படத்தின் இயக்குநர் பேசுகையில், ’இந்தப் படத்தை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் திரையிட்டு காட்டி அவர்களின் கையெழுத்துகளைத் திரட்டி தமிழ்நாடு அரசிடம் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். கடந்த ஏப்.17 அன்று திருநெல்வேலியில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் தலைவர் முபாரக், 'முத்துநகர் படுகொலை' ஆவணப்படத்தை பார்த்ததோடு நீதி வழங்க கோரும் மனுவிலும் கையெழுத்திட்டார். மேலும், சில தலைவர்கள் இந்த வாரம் படத்தைப் பார்க்க இருக்கின்றனர்.
காவல்துறை சம்மன்: இரு தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் தேவராஜ் ஹரீஷ் (Deputy Head, Legal) என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் நாளை (ஏப்.27) என்னை விசாரணைக்கு ஆஜராகுமாறு தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முகாந்திரம் இல்லாதது: ஒரு திரைப்பட இயக்குநரை, படம் எடுத்ததற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிப்பது எங்களுக்கு வேதனையையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கலையின் வழியே பகுத்தறிவையும், மொழி உணர்வையும் ஊட்டிய முன்னோடிகள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற மகத்தான படைப்பாளிகள் ஆண்ட தமிழ்நாட்டில் ஒரு படைப்பாளிக்கு எவ்வித முகாந்திரமும் இன்றி சம்மன் அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது’ என்றார்.
சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு: 'முத்துநகர் படுகொலை' ஆவணத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
படத்தின் இயக்குநர் M.S.ராஜ் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்வதால், அவர் சென்னை வந்தபிறகு தூத்துக்குடி காவல்துறையின் விசாரணைக்கு எப்போது ஆஜராவது என்பது குறித்து முடிவு செய்வோம் என்று நாச்சியாள் பிலிம்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு