சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (ஜூன்13) அனைத்து காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் கைதிகளை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'மத்தியச் சிறைகளில் (அ) கிளைசிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தொடர்புடைய சிறைச்சாலையிலிருந்து தகவல் தெரிவிக்கும்போதும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதும் வழிக்காவலுக்கு காவல் ஆளினர்களை காலதாமதம் ஏற்படாமல் அனுப்பி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு அளித்தால் உயிரிழப்பினைத் தடுக்க முடியும்.
எனவே, மாநகர, மாவட்ட காவல் அலுவலர்கள் கைதிகள் உரிய மருத்துவ சிகிச்சைப் பெற காலதாமதம் இல்லாமல் வழிக்காவலுக்கு (Escort) காவல் ஆளினர்களை அனுப்பி வைக்க, அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் காவல்துறை அலுவலர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கையாள்வது குறித்த நிலையான வழிமுறைகளை அவர் விரிவாக விவரித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி ஆன்லைனில் விடுமுறை விண்ணப்பம்: ஆசிரியர் விடுப்பு எடுக்க கிடுக்கிப்பிடி